75ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தினை ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்திவருகிறது.
பொதுமக்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் ஆரோக்கிய இந்தியா ஓட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தினை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து வயதினரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்படுத்திவரும் விழிப்புணர்வை பின்பற்றி ஆரோக்கிய இந்தியாவினை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் குரங்கு சாவடி பகுதியில் தொடங்கி ஐந்து முனை சாலை - புதிய பேருந்து நிலையம் வழியாக மகாத்மா காந்தி ஸ்டேடியம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆரோக்கிய இந்தியா ஓட்டம் நடைபெற்றது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் முழுமையாக பங்கேற்றார். முன்னதாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் சிலம்பாட்ட சாகசங்களும் நடைபெற்றது.
இதையும் படிங்க: பெர்லின் ஒலிம்பிக்: இது ஹிட்லர் காலத்தின் நினைவு ஓட்டம்