சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பிரபு மணிகண்டன் கூறும்போது,
திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று காலை மேளதாளத்துடன் அதிகமான ஆட்களுடன் கூட்டமாக வந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தன் வீட்டருகே பரப்புரை செய்த அவர், திமுக விளம்பர நோட்டீஸுடம் கூடிய ஆயிரக்கணக்கான தினத்தந்தி நாளிதழை வாக்காளர்களுக்கு இலவசமாக விநியோகித்து வாக்கு சேகரித்தது மட்டுமல்லாமல் தன்னிடமும் அதைக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பல லட்சம் வாக்குகள் உள்ளன. ஒவ்வொரு வாக்காளரிடமும் இதே போல ஒரு குறிப்பிட்ட நாளிதழில் விளம்பர அறிக்கை வைத்து இலவசமாக கொடுத்தால் அது எவ்வளவு செலவாகும் என்று நீங்களே கணக்கிட்டு பாருங்கள் எனக் கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் நீதி மையம் சார்பில் நடந்து சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வாங்க வேண்டும் எனத் தேர்தல் அலுவலர்கள் எங்களை வற்புறுத்துகிறார்கள். ஆனால் அதிமுக, திமுக வேட்பாளர்கள் பல வாகனங்களில் பலநூறு ஆட்களோடு பட்டாசு வெடித்து வாக்கு சேகரிக்கிறார்கள், இதை வைத்து பார்த்தால் ஒரு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் வகித்துள்ள தேர்தல் செலவையும் தாண்டி திமுக, அதிமுக வேட்பாளர்கள் செலவு செய்திருப்பார்கள் என்று சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து உள்ளேன் என்று கூறினார்.