சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகி, நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மே15) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் உள்ளிட்ட மருத்துவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், சிகிச்சைக்காக நீண்ட வரிசையில், அவசர ஊர்தி, ஆட்டோக்களில் காத்துக்கிடக்கும் நோயாளிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து, உடனடியாக படுக்கைகளின்றி வெளியே காத்து இருக்கும் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுத்து சிகிச்சையளிக்கும்படி மருத்துவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அப்போது பல நாள்களாக தொடர்ந்து அரசு மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி காத்துக்கிடப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். தனது தாய் கடைசி நிலையில் இருப்பதாக கூறி அவரை காப்பாற்றுமாறு வேண்டி அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீரோடு அந்தப் பெண் வேண்டினார்.
இதனையடுத்து உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்தி மூதாட்டியை காப்பாற்றுமாறு அமைச்சர் மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டார். இதேபோல 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் திறந்தவெளியில் காத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், இந்த நிலைமை மருத்துவமனையில் இனி இருக்கக்கூடாது என்று மருத்துவமனை முதல்வரிடம் வலியுறுத்தினார்.
பதினைந்து நிமிட ஆய்வுக்கு பின்னர், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் சேலம் இரும்பாலையில் புதிதாக அமைக்கப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிடுவதற்காகச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் குணமடைய மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறப்பு!