சேலம் அருகே மின்னாம் பள்ளியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இப்கோ நிறுவனம் உரத்தின் விலையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்த நிலையிலேயே அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் விவசாய பரப்பு 20 சதவீதம் கூடுதலாகி உள்ள நிலையில் மானிய தொகையை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் புதியதாக அமைய உள்ள அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 24 மணி நேர மும்முனை இலவச மின்சாரம் தற்போது தேர்தல் முடிந்த நிலையில் முறையாக விநியோகிக்கப்படவில்லை.
விவசாயத்திற்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களை அபகரிக்கப் பலர் முயற்சி செய்து வருகின்றனர். அதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரியப் பட்டா வழங்க வேண்டும். குறிப்பாக ஏற்காடு மலைக்கிராமங்களில் இந்த பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா போடும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'வெற்றி விழாவுக்குத் தயாராக இருங்கள்’ - முதலமைச்சர் பழனிசாமி