சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், திமுக பொதுச் செயலாளராக இருந்து அனைவரையும் சமமாக மதித்தவர் மறைந்த பேராசிரியர் அன்பழகன்.
மறைந்த முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவராகத் திகழ்ந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி யாருக்கும் பயப்படமாட்டோம் என்றும், சேலம் மாவட்டம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கோட்டை என்றும் பேசியுள்ளார்.
திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்: இனி வரும் காலங்களில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் திமுகவின் கோட்டையாக மாற்றுவோம். மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி விட்டதாக எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5.50 லட்சம் கோடி கடன் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்திலும் பேருந்து கட்டணம், பால் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மின் துறையில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நலத்திட்டங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் செலவாகி வருகிறது. கடன் சுமையைக் குறைக்கும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் காரணமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் காலங்களில் சேலத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் சேலம் வருகிறார். அப்போது கால்நடை ஆராய்ச்சி பூங்கா பணிகள், சட்டக் கல்லூரி, பெரியார் பேரங்காடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அதிமுகவிலும் வாரிசு அரசியல் செய்யுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை, வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இப்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். வாரிசு அரசியலுக்கு வாய்ப்பு இருந்தால் அதிமுகவிலும் செய்யலாம். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எப்படி முதலமைச்சனரானார் என்பது மக்களுக்குத் தெரியும்.
திமுகவில் மட்டும் தான் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அவர்களோடு நாங்கள் பயணிக்கிறோம். சேலம் மாவட்டத்துக்கு ரூ.530 கோடியில் புதை சாக்கடை திட்ட பணி, தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட ரூ.158 கோடியில் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையின் போது 53 எம்.எல்.டி. குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஜருகுமலையில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் ரூ.20 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக நூற்பாலையின் இடத்தைக் கேட்டுள்ளோம்.அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் 89 சதவீத பணிகள் முடிந்துள்ளது. விரைவில் மீதமுள்ள பணிகள் தொடங்கப்பட்டு, திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் 100 ஏரிகளை நிரப்ப தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 3.5 லட்சம் கோடி கடன்: திமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சேலத்தில் 119 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. சேலம் நகரில் உள்ள அனைத்து ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களும் ஜவுளி பூங்காவுக்கு இடம்பெயரும். மேலும் 15 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பு வகித்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து சென்று விட்டார்.
இப்போது திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என குறை கூறுகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 528 அறிவிப்புகளில், சுமார் 208 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 537 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன?. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 143 திட்டங்களுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், திமுக பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் மூலம் ரூ.35,000 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.23,000 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.24,000 கோடியும், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி கடன் பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் தான் ஆகி உள்ளது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். வன்னியர் சமுதாயத்தினர்க்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்று தர மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் போராடி வருகிறார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக வெற்றிக்காக பாடுபட்டவர் உதயநிதி.. திமுக பொருளாளர் டிஆர் பாலு..