சேலம்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில், சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று(ஜன.2) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், "தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக மின் மிகை மாநிலம் என்று கூறிக்கொண்ட அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவில்லை.
திருமணிமுத்தாறு திட்டம்
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். சேலத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தைப் பற்றி 50 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு உள்ளோம், தற்போது தான் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகளைத் தொடங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடையும். மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் நிறைய தண்ணீர் இருந்தாலும் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
உளுந்தூர்பேட்டையில் இருந்து சேலம் வரை உள்ள நெடுஞ்சாலை, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலை போல உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம் வரை உள்ள சாலை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.
ஆத்தூர் தனி மாவட்டம்
11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டமாக உள்ள சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆத்தூர் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு, தனி மாவட்டம் அமைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தற்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தான் உள்ளன. ஏற்கெனவே திமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை இடம் பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து முதலமைச்சரை நேரில் விவசாயிகள் சந்திக்க உள்ளனர். அதன்பின் நல்ல முடிவு எட்டப்படும்.
திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதாகவும் அதைச் சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். தற்போது சேலம் மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று விடும். அதன் பின்னர் கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் கலப்பது பெரும்பாலும் தடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சேலம் வடக்கு மாவட்ட எம்எல்ஏ ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: New Commissioner Office Divisions: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ஆணையரகங்கள்கீழ் இயங்கும் காவல் நிலையங்கள்