சேலம் : அண்ணா பட்டு மாளிகை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை வளாகம், சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் ஆகிவைகளில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று (ஜூலை20) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் தைத்தறி மற்றும் துணிநூல் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி, மாவட்டம் தோறும் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை வளாகங்கள், சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டுவரப்பட உள்ளன. தற்போது கரோனா காலம் என்பதால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை குறைந்திருக்கிறது. அதனை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆர்கானிக் துணிகளில் ஆயத்த ஆடைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பட்டு நூல்களின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமான ஜவுளி பூங்கா அமைய உள்ளது. அது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. போலியான சங்கங்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர் பியூலா ராஜேஷ், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்
இதையும் படிங்க: மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்