சேலம்: தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான சமூக நலத்துறை ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இதில் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 135 பயனாளிகளுக்கு, 1 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
கீதா ஜீவன் செய்தியாளர்கள் சந்திப்பு
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது நிறைவடைந்து, முதிர்வு பெற்ற 73 ஆயிரம் குடும்பங்களுக்குத் தரவேண்டிய தொகையை கடந்த அதிமுக அரசு வழங்காமல் விட்டது.
இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த, 3 லட்சத்து 34 ஆயிரத்து 13 விண்ணப்பங்களை, அதிமுக அரசு நிலுவையில் வைத்துவிட்டது.
எனவே, நிலுவையிலுள்ள திருமணத்திற்கான உதவித் தொகை கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உதவித் தொகை வழங்கிட 3 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறோம்.
கரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குழந்தை திருமணங்களை தடுக்க தேவையான குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் காப்பகங்கள் உள்ளதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, சமூக நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சமூக நலத்துறையில் முறையாகப் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது .
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் 49 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு இவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.
கீதா ஜீவனுடன் மக்களவை உறுப்பினர்கள் பார்த்திபன், சின்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.