சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பகிர்வு பிரிவான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மேட்டூர் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையம் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் 820 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பலை, வெளியே எடுத்துச் செல்ல வழங்கப்படும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் வெங்கடாசலம் கூறுகையில், "மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து தினமும் வெளியேற்றப்படும் உலர் சாம்பலால் மேட்டூர் சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்டவைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் மேட்டூர் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் சீர்கெட்டுள்ளது. இதனிடையே, அனல் மின் நிலையத்திலிருந்து உலர் சாம்பலை வெளியேற்ற உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்ற வேண்டும் என்று மேட்டூர் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதன்படி மேட்டூர் அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் செயல்படவில்லை. அதற்கு நேர் எதிராக தலைமை பொறியாளர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தனது பினாமி நிறுவனங்களுக்கு உலர் சாம்பல் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் எங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. ஆகவே, ஒரு தலைப்பட்சமாக செயல்படாமல், மண்ணின் மைந்தர்களான உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு உலர் சாம்பல் ஒப்பந்தத்தை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை மேட்டூர் அனல் மின் நிலைய தலைமை பொறியாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த கடிதத்தின் நகலை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்பு காவல்துறை தலைவர், சேலம் மாவட்ட ஆட்சியர் உட்பட 12 உயர் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முறைகேடு புகார் எதிரொலி.. பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்