சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உள்ள உபரி நீர் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிவத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், சேலம், எடப்பாடி, இருப்பாளி ஆகிய பகுதிகளில் சரபங்கா நீரேற்றும் திட்டம் குறித்து எந்த ஒரு விளக்கமும் வழங்காமல் செயல்படுத்துவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை மனுவை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் கூறுகையில், "முதலமைச்சர் செயல்படுத்தும் இந்தத் திட்டம் பயனளிக்கும் விதத்தில் அமையும். ஆனால், நாங்கள் இந்தச் சட்டத்தை வரவேற்கிறோம். இருப்பினும் இந்தத் திட்டம் குறித்து விவரங்கள் எதுவும் விவசாயிகளிடம் தெரிவிக்கவில்லை குறிப்பாக இந்தத் திட்டத்தின் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் எங்களுக்கு நிலவி வருகிறது.
இந்தத் திட்டம் குழாய், வாய்க்கால் வழியாக விவசாய விளைநிலத்தில் செயல்படுவதால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இத்திட்டத்தை வாய்க்கால் வழியாக கொண்டு சென்று ஏரிகளை நிரப்பினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் விவசாயம் செழிக்க கால்வாய் வழியாக நீரேற்றம் செய்தால் மட்டுமே இது பயனுள்ள திட்டமாக அமையும்.
மேலும் புதிய திட்டம் குறித்து விவசாயிகளிடம் எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் விவசாயிகளின் அனுமதி இல்லாமல் அவர்கள் நிலத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக அளவிடும் பணியில் தற்போது அலுவலர்கள் ஈடுபட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் நிலத்தில் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்காமல் இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலைக்கு இந்தத் திட்டம் அமைந்துவிடும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலியருக்கு கொரோனா!