சேலம்: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்கு முக்கிய ஆதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
அணை கட்டி முடிக்கப்பட்டு 86 ஆண்டுகளில் 67 ஆவது முறையும், நடப்பாண்டில் முதல் முறையாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்று (அக்.24) காலை 11.10 மணி அளவில் 100 அடியை எட்டியது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் நீரை மலர் தூவி வரவேற்றனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 28 ஆயிரத்து 650 கன அடியாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைப்பகுதியில் மழையளவு 18.40 மி.மீ ஆக பதிவாகியுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது - மதுரை ஆதீனம்