தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய விதிமுறைப்படி மாநகரம் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் புதிய வீடுகள், வணிக கட்டடங்கள் கட்டுவோர் மின் இணைப்பு வேண்டி இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய மின் இணைப்பு வழங்கும் விதிகளின்படி குடியிருப்பு கட்டடங்களை பொறுத்தவரை 12 மீட்டர் உயரம், 750 மீட்டர் அகலம் கொண்ட பரப்பளவிற்குள் மூன்று குடியிருப்புகளுக்கு மிகாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு தொழிற்சாலை வகையில் இடம்பெறும் மின் இணைப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டண அளவீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் பன் மடங்கு கூடுதலான மின் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைந்து தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு மின் பணியாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கோவிந்தன் கூறுகையில், "புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தவறுதலாக வெளியிடப்பட்ட விதிமுறைகளால் குளறுபடிகள் நடந்து வருகின்றன. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பன்மடங்கு கூடுதலாக மின் கட்டணம் செலுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்தக் குளறுபடிகளை தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும்" என்றார்.