சொந்த வீட்டு மனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கவும், 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை எளியோருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிபிஐ-எம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு வீட்டுமனை மற்றும் குடி மனை பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்(வடக்கு) மாநகர செயலாளர் பிரவீன் குமார் கூறுகையில்," தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏழை எளிய நடுத்தர குடும்ப மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை எளியோருக்கு அரசாணை எண் 318/ 19 கீழ் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தியும் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
சேலம் வளர்ந்துவரும் நகரம். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடிசைகளிலும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி அரசு உதவவேண்டும். ஏராளமான காலி நிலங்கள் சாமியார்களிடமும் பெரும் முதலாளிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன.
அந்த இடங்களை இனம் கண்டு முதலமைச்சர் தனது சொந்த மக்களுக்கு இலவச வீட்டு மனையும், 5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை எளியோருக்கு குடி மனை பட்டாவும் வழங்க வேண்டும். இல்லை என்றால் அரசு புறம்போக்கு நிலங்களை இனம்கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப் பெரிய அளவில் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பட்டா வழங்கிய இடத்தை தரக் கோரி ஆதிதிராவிட மக்கள் போராட்டம்!