சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10ஆம் தேதி வருகை தந்தார். முதலமைச்சர் 11ஆம் தேதி காலை சேலம் மாநகரில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் . இதைத் தொடர்ந்து, 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக நீர் திறந்து விட்டார்.
பின்னர், நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
இதற்கிடையே இன்று (ஜூன்14) காலை, முதலமைச்சரை, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் நேரில் சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டம் நங்கவள்ளி வடக்கு ஒன்றியம் சாணார்ப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பி. இராஜேந்திரன் திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை முதலமைச்சர் முன்னிலையில் இணைத்துக் கொண்டார் .
அதேபோல், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் பொட்டனேரி ஒன்றியக் கவுன்சிலர் ஜெகநாதன், முதலமைச்சரை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் .
இந்நிகழ்வின்போது மாநிலங்களவை எம்பி சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்ளிட்ட சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் உடனிருந்தனர்.