சேலம்: தவறுகள் செய்து விட்டு சிறைக்குள் இருக்கும் கைதிகளை திருத்தி வாழவைப்பதே சிறைத்துறையின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிராக சேலம் மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகளே கைதிகளுக்கு செல்போன், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை கொடுத்து, அவர்களை துன்புறுத்துவதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் பிரபு என்கிற மாங்கா பிரபு. இவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக சேலம் நீதிமன்றத்திற்கு இன்று மாங்கா பிரபு அழைத்துவரப்பட்டார்.
அப்போது அவர் திடீரென நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகள் கைதிகளுக்கு அதிகப்படியான துன்புறுத்தல்களை கொடுத்து வருவதாகவும், சிறைக்குள் செல்போன், சிம் கார்டு, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை சிறைக் காவலர்களே கொண்டு வந்து கைதிகளிடம் விற்பனை செய்யவதாகவும் கண்ணீர் மல்கப் புகார் கூறினார்.
தற்பொழுது கூட சேலம் மத்திய சிறை சாலையில் மூன்று இடங்களில் செல்போன்கள் மண்ணில் புதைக்கப்பட்டு இருப்பதாகவும்; அதனை நான் நீதிபதியிடம் கூறி, அந்த செல்போன் மண்ணில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்தே எடுத்து அவரிடம் தருவேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிறைத்துறை நிர்வாகத்தின் மீது சுமத்தினார். இதனால் அவரை வாய்தா விசாரணைக்காக அழைத்து வந்த போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். மேலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயுள் தண்டனை கைதி மாங்கா பிரபு , ''சிறையில் சில நாட்களுக்கு முன்பு நான்தான் சாராய ஊறல் போட்டேன் என்று கூறி ஜெயில் சூப்பரென்டென்ட் உள்ளிட்ட அதிகாரிகள் மன உளைச்சல் கொடுத்து தாக்கினர். மேலும், ஆடைகளை கழற்றி விட்டு அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.
மணிக்குமார் என்பவர்தான் செல்போனை சிறையில் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே, அதை அவர் வேறு ஒரு நபரிடம் கொடுத்துவிட்டார். அந்த நபர் அந்த செல்போன் மூலம் பலரை தொடர்பு கொண்டு ஒரு கொலையையும் செய்துள்ளார். தற்போது அது விசாரணையில் உள்ளது” எனக் கூறினார்.
மேலும் இதுபோன்று கஞ்சா, செல்போன், சிம் கார்டுகளை கொடுத்து போலீசார் தங்களை துன்புறுத்துவதாகவும், இது போன்ற கொடுமைகளுக்கு சிறை உளவுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதை நீதிபதியிடம் நான் தெரிவித்து விடுவேன். என்னைப் போன்ற கைதிகளுக்கு சிறையில் பாதுகாப்பில்லை. வேறு எந்த கைதிக்கும் இதுபோன்ற நிலைமை வந்து விடக்கூடாது. நீதிமன்றம் குற்றவாளி என்று முடிவு செய்வதற்கு முன்பே சிறை காவலர்கள் எங்களை குற்றவாளி என்று முடிவு செய்து பல கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றனர்”, என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த சேலம் அஸ்தம்பட்டி போலீசார் கைதி மாங்கா பிரபுவை சமாதானம் செய்து, நீதிமன்றத்தின் உள்ளே விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வாசலில் நடந்த இந்தச் சம்பவம் சிறை அதிகாரிகள் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தால் கைதி என தீர்மானிக்கும் முன்பே சிறைச்சாலையில் இத்தகைய கொடுமைகள் நடைபெறுவது வேதனைக்குரியதாக உள்ளது. இவ்வாறு சிறைக்குள் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி கேள்வி எழுப்பப்படாமல் உள்ளது. கைதிகள் என்பதாலேயே அவர்களுக்கு நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் டம்மி செல்போன் விற்று ஏமாற்றிய இரு வடமாநிலத்தவர் கைது!