சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர், ஆத்தூர் ,தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பல நூறு ஏக்கர் விளை நிலங்களில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால், வெண்டைக்காய் வேளாண்மை நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கும் உழவர் சந்தைக்கும் வெண்டைக்காய் வரத்து முன்னதாக அதிகரித்த நிலையில், அதன் விலை தற்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனிடையே கடந்த வாரத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய், தற்போது வீழ்ச்சியடைந்து நேற்று (ஏப்.12) ஒரு கிலோ மொத்த விலை ஐந்து ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்துப் பேசியுள்ள விவசாயிகள், ”வெண்டைக்காய்க்கு நல்ல விளைச்சல் இருந்தும் அதற்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சாகுபடி செய்த நிலையில், உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.
இது போன்ற நேரங்களில் எங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு முன் வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் சித்திரைத் திருவிழா நடத்தக் கோரி போராட்டம்!