சேலம் இரும்பு உருக்காலை உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, ஹெச் எம் எஸ், ஏஐசிசிடியு ஆகிய தொழிற் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. சம்பளம் வழங்கல் சட்டம், போனஸ் வழங்கல் சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், சம ஊதிய சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ஊதிய குறைப்பு என்னும் பெயரில் சுருக்கப்பட்டு உள்ளன .
அதே போல தொழிற்சாலை சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம் , கட்டுமானம், மோட்டார் போக்குவரத்து , செய்தித்தாள் ஊழியர், சினிமா தொழிலாளர் உள்ளிட்ட 13 சட்டங்களை, தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை சூழல் என்ற பெயரில் குறுக்கி உள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் அழித்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய அரசு சேவகம் செய்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இதனை கண்டித்து நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்க அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்துகின்றன. மேலும் சேலம் உருக்காலை உள்ளிட்ட மூன்று உருக்காலைகளையும் 41 பாதுகாப்பு தொழிற்சாலைகளையும், ஐசிஎஃப் உள்ளிட்ட ரயில் பெட்டி தொழிற்சாலைகளையும், தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைப்பதை கண்டித்தும், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றன.
எனவே மத்திய பாஜக அரசு உடனடியாக தொழிலாளர் உரிமைகளை காக்கின்ற நடவடிக்கையில் இறங்கவேண்டும் , முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளதை வாபஸ் பெற வேண்டும் " என்று தெரிவித்தார்.