சேலம் : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகி, காமராஜருக்கு நெருக்கமானவருமான குட்டப்பட்டி நாராயணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 97.
இந்நிலையில் குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதநாயக்கன்பட்டி பகுதியில் அவரது குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இணைந்து மணிமண்டபம் கட்டும் பணியை தொடங்கி மூன்று மாதங்களில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்துவைத்தார். குட்டப்பட்டி நாராயணன் கடந்த 1953 முதல் 2019 வரை குட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து பதவியில் இருந்துள்ளார்.
இதனிடையே 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், நாமக்கல்,தர்மபுரி ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். காமராஜர் எவ்வாறு எளிமையாக வாழ்ந்தாரோ அதை பின்பற்றி இறப்பு வரை தொடர்ந்து மிகுந்த எளிமையாக பின்பற்றி வாழ்ந்து மறைந்தார்.
இந்த மண்டப திறப்பு விழாவில் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த விழாவில் உரையாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”அரசியல் தலைவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் குட்டப்பட்டி நாராயணன். அவரின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.
இந்த மாவட்டமும், குட்டப்பட்டி கிராமமும் இவரால் வளர்ச்சி அடைந்தது. இந்த கிராமத்தில் உள்ள ஏழை,எளிய குழந்தைகள் படிப்பதற்காக தனது நிலத்தையே தானமாகக் கொடுத்து பள்ளிக் கூடம் அமைத்து காமராசர் கையால் திறந்து வைத்த பெருமை இவரையே சாரும்”எனக் கூறினார்.
இதையும் படிங்க : சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!