சேலம்: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மாணவாளபுரம் அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த முத்துராஜின் மனைவி ரதி (32). இவர் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அங்கு திலகவதி என்பவருடன் ரதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திலகவதியின் அழைப்பின் பேரில், ரதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது ரதியிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட திலகவதி, திடீரென குழந்தையுடன் மாயமானார். இது குறித்து புகாரின் பேரில், திருச்செந்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியில் திலகவதி குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றது பதிவாகி இருந்தது.
அதனை வைத்து விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர். இதனிடையே குழந்தையை கடத்திய திலகவதி, அவரது ஆண் நண்பர் பாண்டியன் ஆகியோர் கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆலாந்துறை போலீஸார் திலகவதி, பாண்டியனை கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் திலகவதி உடல் நலம் பாதித்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திலகவதியின் ஆண் நண்பர் பாண்டியன், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தென்னம்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தையும் அங்கிருப்பது தெரிய வந்ததையடுத்து, ஆலாந்துறை போலீசார் சேலம் மாவட்ட காவல் துறை உதவியுடன், தென்னம்பிள்ளையூர் பகுதியில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்டுள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண் குழந்தை ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.. முதலமைச்சர் கேள்வி - அதிமுக வெளிநடப்பு!