கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கெஜகன்சேரியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் டேல்வின் பீட்டர். இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், டேல்வின் பீட்டர் படிக்கும் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த டேல்வின் பீட்டர், சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பாலக்காடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மாணவனின் செல்போன் எண்ணை வைத்து கேரளா காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர் சேலத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் மாநகர காவலர்களை தொடர்பு கொண்ட பாலக்காடு காவல்துறையினர், டேல்வின் பீட்டர் குறித்த விவரத்தை தெரிவித்தனர்.
இதனிடையே, சேலம் ஐந்து ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த பீட்டரை மீட்ட பள்ளப்பட்டி காவலர்கள், பாலக்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவரின் பெற்றோருடன் சேலம் வந்த பாலக்காடு காவல்துறையினர், டேல்வின் பீட்டரை அழைத்துச் சென்றனர்.