சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் (பிப். 17) இரவு சாலையில் வழிதெரியாமல் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி, சாலையில் சென்ற பொதுமக்களிடம் பெங்களூரு செல்ல பணம் கேட்டுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி பெங்களூருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் என்பது தெரியவந்தது.
மேலும், சிறுமியின் தந்தை, சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்கவைத்துள்ளார். அங்கு சிறுமியின் பெரியப்பா திட்டியதாகத் தெரிகிறது. இதனால், கோபமடைந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறினார்.
கேரளாவிலிருந்து பேருந்து மூலம் தேனி சென்ற சிறுமி அங்கிருந்து சேலம் வந்துள்ளார். அங்கிருந்து, பெங்களூரு செல்ல பணமில்லாததால் அவர் தவித்தது தெரியவந்தது.
இதனிடையே இடுக்கி மாவட்டம் வாகமான் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல்போனதாகப் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி மீட்கப்பட்டது தொடர்பாக கேரள காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கேரளாவிலிருந்து சேலம் வந்த காவல் துறையினரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமி பத்திரமாக அவரது பெரியப்பாவுடன் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 5 ரூபாய் நாணயம் விழுங்கிய சிறுமி மருத்துவமனையில் அனுமதி!