சேலம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 3000 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விட்டது. இதனையடுத்து தமிழகத்திற்குக் காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவையும், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 26ஆம் தேதி கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பெங்களூருவில் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. சேலம், தருமபுரி கோட்டங்களிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நாள்தோறும் 250 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முழு அடைப்பு காரணமாக நேற்று இரவு 10 மணி முதல் அரசு பேருந்துகள் பெங்களூர் செல்லாமல் தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பெங்களூரு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளிலும் அத்திப்பள்ளி வரை மட்டுமே செல்லும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் பயணிகள் அத்திப்பள்ளி பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கின்றனர். குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்குக் கூட பெங்களூரு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முழு அடைப்பு நடைபெறுவதை முன்னிட்டு தமிழக கர்நாடகா மாநில எல்லையான ஒசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் இரு மாநில போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெங்களூருவில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இதையடுத்து சேலம் கோட்டத்திலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் பெரும்பாலான பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பேருந்துகள் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்