சேலம்: புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வீட்டு உபயோக விற்பனை நிலையத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர்,
“நீட் தேர்வு வேண்டாம் என்பதை அனைவரும் ஒருமனதாக வலியுறுத்திவருகிறோம். முதலமைச்சர் நிலையாக நின்று, நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுத்துவருவது வரவேற்கத்தக்கது.
நீட் தேர்வு காரணமாக தன்னம்பிக்கை இழந்து மருத்துவம் படிக்க வேண்டாம் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறிவருகின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விலை உயர்வு அதிகரித்து மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அனைவரும் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே அணியில் திரண்டுவருகின்றனர். பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. 2024ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி” எனக் கூறினார்.
இதையும் படிங்க : முதலமைச்சரை சந்தித்த தர்மபுரி எம்.பி. - ஆண்டு பணி அறிக்கை ஒப்படைப்பு