இரண்டு நாள் தேர்தல் பரப்புரை பயணமாக இன்று (ஜன.3) சேலம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சேலம் மாநகரின் அழகாபுரம், அஸ்தம்பட்டி, கோரிமேடு ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அதன் பிறகு ஏற்காடு சென்ற அவர், காஃபி தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைத்தால், ஏற்காட்டில் உள்ள மோசமான சாலைகளை ஆறே மாதத்தில் சீரமைப்பு செய்வோம். இங்கு வனவிலங்குகள் அதிகம் உள்ளன. குறிப்பாக காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. எனவே வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் காட்டெருமைகளுக்கு என ஏற்காட்டில் சரணாலயம் அமைக்கப்படும்.
ஏற்காட்டில் விளையும் பொருட்களுக்கு இங்கேயே விற்பனை செய்யும் மையமும், பழ ஆலையும் அமைக்கப்படும். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பதே எங்கள் லட்சியம். அமைச்சரவையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் . கல்வி, சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும்.
இதுபோன்ற ஒரு அரசை மக்கள் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. எதையெல்லாம் சீரமைக்க வேண்டுமே அதையெல்லாம் பணமாக்கி கொள்கின்றனர். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். வெள்ளையனே வெளியேறு என்று காந்தி சொன்னதுபோல், கொள்ளையனே வெளியேறு என மக்கள் நீதி மய்யத்தோடு சேர்ந்து நீங்கள் ஒலிக்க வேண்டும். ஊழல்களால் மாறியுள்ள சோகச் சக்கரத்தை, அசோகச் சக்கரமாக மாற்றுவோம் " என்றார்.