சேலம்: தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தற்போது எதிர்பாராத மழை வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வருடம் முழுவதும் பெய்கின்ற மழை ஒரே நாளிலே பெய்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இந்த பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். அப்படி கள் இறக்குவதற்கானத் தடையை நீக்கவில்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்கும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம். ஜனவரி 21ஆம் தேதி திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஒரு கள் ஆதரவாளர். அவர் ஒருமுறை அவரது சிறு வயதில் நோய் வாய்ப் பட்டிருந்தபோது மருத்துவரின் அறிவுரைப்படி கள்ளைத் தொடர்ந்து பருகியதால் நோயிலிருந்து விடுபட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை அவரது சுயசரிதையான 'நான் ஏன் பிறந்தேன்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரும் கள் ஆதரவாளராகவே இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் அவருடைய ஆட்சியில் தான் சிலரின் சூழ்ச்சியால் கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ஓராண்டு நிறைவு..அமைச்சர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!