சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அதிமுக சேலம் மாநகர மாவட்டக் கழகம் சார்பில் பொதுக்கூட்டமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு, 47 ஆயிரத்து 72 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும், மக்களுக்கு செயல்படுத்திவருகிறோம்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலனை விரும்பும் ஒரு விவசாயி தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. அதனால் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்றது. இதை பொறுக்காத திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், என்னை ’விசித்திர விவசாயி’ என்கிறார். இதன் மூலம் விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தி பேசிவருகிறார். ஆம், நான் விசித்திர விவசாயி தான்.
மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்தது திமுக, அதை நாங்கள் தான் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். திமுகவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் வரும் தேர்தல்களில் சரியான சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது.
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சியில் அமரும். அதை ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார். சேலத்தில் உள்ள 60 வார்டுகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது யாரை ஏமாற்றுவதற்கு?’ - மு.க. ஸ்டாலின் கேள்வி