சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்திலுள்ள பயிற்சி கட்டகத் தயாரிப்புப் பணிமனையில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் பணியாற்றிவந்தனர்.
இப்பயிற்சியை நிறுவன முதல்வர் முனைவர் மு. செல்வம் தலைமைதாங்கி தொடங்கிவைத்தார். பணி அனுபவத் துறைத் தலைவர் முனைவர் சுவே விஜயலக்ஷமி சங்கர் பயிற்சியை வடிவமைத்து மின்னணு கட்டகம் (e-module) தயாரிப்புப் பணியை ஒருங்கிணைத்து, முழுப்பயிற்சிக்கான காணொலியையும் வழங்கினார்.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு எண்ம வளத்தைப் (Digital Resources) பயன்படுத்தி எளிமையாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு காணொலியையும் தயாரித்துள்ளனர். இக்காணொலி காட்சியானது அனைத்து வகையான கற்பித்தலையும் மனத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அப்பயிற்சியில் ஒவ்வொரு எண்ம வளத்தையும் பயன்படுத்தி அறிவியல், சமூக அறிவியல் பாடப்பொருளில் எவ்வாறு இணைத்து கற்பிப்பது என்று மின்னணு கட்டகம் தயாரிக்கப்பட்டு, கட்டகத்தின் அடிப்படையில் எண்ம வளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது.
இதையும் படிங்க: சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி!