சேலம் எருமாபாளையம் அருகே உள்ள காரட்டுமரகுட்டை பகுதியில் 40க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து சென்றுவர கடந்த பல ஆண்டுகாலமாக விவசாய நிலத்தை ஒட்டிய பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பாதையை அடைத்து தனிநபர் ஒருவர் தனது வீட்டை ஒட்டி சுவர் எழுப்ப முயற்சி மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதை கோரி ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கில் பொது மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை வருவாய்த்துறையினர் அமல்படுத்தவில்லை. இதனால் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவற்றை அகற்றாமல் உள்ளதால் இப்பாதைக்கு பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகிவருவதாகவும் கீழே விழுந்து அடிபடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த போராட்டத்தை அடுத்து வருகின்ற 21ஆம் தேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதியளித்துள்ளதாக பொதுமக்களிடம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு!