சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில், செயல்பட்டு வரும் கல்வியியல் துறையில், வரும் கல்வியாண்டு முதல் எம்.எட். (M.Ed) வகுப்புகள் நடத்த தேசிய ஆசிரியர் கல்வியியல் வாரியம் (National Council for Teacher Education - NCTE) திடீர் தடை விதித்துள்ளது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வியியல் வாரியத்தில், A++ வாங்கிய நிலையில் அண்மையில் அந்த வாரியம் அங்கு தர ஆய்வு நடத்தியதில் பல அடிப்படை குறைபாடுகளைக் கண்டுபிடித்து உள்ளது. அதன் அடிப்படையில் அண்மையில் மத்திய அரசு ஓர் அரசாணையை 14.10.2022 அன்று வெளியிட்டுள்ளது.
அதில், சேலம் பெரியார் பல்கலை கல்வியியல் துறையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, இரண்டு பேராசிரியர்கள் இரண்டு இணைப் பேராசிரியர்கள் ஆறு உதவிப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதால் வரும் கல்வியாண்டில் எம்.எட். நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. இது தற்போது பணி ஆற்றி வரும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, இரு பேராசிரியர்கள் கல்வியியல் துறையில் இருப்பினும், கல்வியியலுக்கே சம்பந்தமில்லாத நூலக அறிவியல் துறை பேராசிரியர் முருகன் துறைத் தலைவர் பொறுப்பில் இருப்பதும் இதற்கு ஒர் காரணமாக உள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பல்கலைக்கழகத்தின் 'NCTE' தர வரிசை பறிபோய்விடுமோ? என்ற அச்சம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இதையும் படிங்க: முறைகேடு புகார் எதிரொலி.. பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்!