சேலம்: எடப்பாடியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகம் முழுவதும் பருவ மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அறிக்கையின் வாயிலாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஏதேதோ பேசி வருகிறார். எதிர்க்கட்சி என்ற முறையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புகிறார். இது கண்டிக்கத்தக்கது.
அதேபோல இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் விளக்கம் கேட்கிறார். அந்த விண்ணப்பத்தில் சாதி குறித்தும் தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிடுமாறும் கேட்கிறார்கள். இதை எப்படி பெண்கள் கொடுப்பார்கள். அது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.
திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது பிங்க் பெயிண்ட் அடித்த நகரப் பேருந்துகளில் மட்டுமே இலவசமாகப் பெண்கள் பயணம் செய்யும் சூழல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு செயல்படாமல் மக்களை ஏமாற்றும் வகையில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு திராவிட மாடல் அரசு அல்ல, தந்திர மாடல் அரசு.
கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு குருவை சாகுபடிக்காகத் தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது டெல்டாக்காரன் என்று வீர வசனம் பேசினார். ஆனால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் விளைச்சலை எடுக்க முடியவில்லை.
ஐந்து லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குருவை சாகுபடி மூன்று லட்சம், மூன்றரை லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி கருகிப் போய்விட்டது. அணையில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது எவ்வளவு நாளைக்கு வரும் என்று உண்மையைக் கணக்கிடாமல் அவசரகதியில் குருவை சாகுபடிக்காக ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.
இந்தியா கூட்டணிக்காகப் பெங்களூர் சென்ற முதலமைச்சர் தமிழ்நாட்டின் நிலைமையை எடுத்துச் சொல்லி இருந்தால் கர்நாடக அரசு தண்ணீர் வழங்கி இருக்கும். குறைந்தபட்சம் நமக்குப் பாக்கி வைத்துள்ள தண்ணீரில் 10 டிஎம்சி தண்ணீராவது கிடைத்திருக்கும்.
நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகார் என்பது விசித்திரமானது. டெண்டரே நடக்கவில்லை அதில் ஊழல் நடந்தது என்கிறார்கள். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்கள் தான் அச்சத்தில் உறைந்து உள்ளனர். இரண்டரை ஆண்டுக் கால திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளனர் அதுதான் அவர்களின் சாதனை" என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: இனிப்போ..! காரமோ..! ரயிலில் போகும் போது சாப்பிடனும்னு தோணுதா? அப்படி இதை ட்ரை பண்ணுங்க!