சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. அண்ணன், தம்பி பிரச்னை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக திரிக்கப்பட்டு ஊடகத்தில் வெளிவந்துள்ளது.
அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர். நீதிமன்றம் உத்தரவுபடி சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது. அரசுக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது. தொகுதி பங்கீட்டில் இழுபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும்.
நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் போல் காட்சி அளிக்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும். அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும். அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.
அதிமுகவில் எள் முனை அளவுகூட பிரச்னை இல்லை. பிளவு இல்லை. நானும் துணை முதலமைச்சரும் ஒன்றாகத்தான் உள்ளோம். இதை திமுகவினர் தவறான பரப்புரை செய்து வருகின்றனர். திமுகவில் உள்ள முக்கிய பிரச்னைகளை அவர்கள் கவனம் எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். அழகிரி தனியாக செயல்பட்டு வருகிறார். அது குறித்து திமுக கவலைப்பட வேண்டும். அதிமுகவை பற்றி அவர்களுக்கு கவலை தேவையில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட 11 மருத்துவமனைகளைக் கொண்டுவந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் உதவி பெற்று ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது. எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன்” என்றார்.
இதையும் படிங்க:'அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள்’: டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்