இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் "மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சரபங்கா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து வடுகப்பட்டி ஏரிக்கு பைப்லைன் அமைக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் ரகசியமாக நில அளவீடு செய்துள்ளனர்.
இதனால் பாப்பம்பாடி கிராம பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்தத் திட்டத்தை விவசாய நிலம் பாதிப்படையாத வகையில் வடுகப்பட்டி ஏரியின் நீரோடை வழியாக வெள்ளாளபுரம் ஏரியிலிருந்து, அக்கரைப்பட்டி வடிகால் வழியாக, பாப்பம்பாடி கிராமத்திலுள்ள புது ஏரிக்கு கிழக்கே, கசப்பேரி வழியாக தெற்கே உள்ள கந்தன் குட்டையிலிருந்து, தெற்கே ஏகாபுரம் சின்ன ஏரியிலிருந்து பெரிய ஏரிக்கு நீரோடை வழியாகவே செல்லும் வழித்தடத்தில் உபரி நீரை கொண்டுச் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது தங்களது வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகள் பாதிப்படையாத வகையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, "சிறு, குறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்கள் வழியாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறித்துவிடும். மாற்று வழியில் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ. 151.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!