சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கத்திரிப்பட்டி, குப்பனூர் கிராமம். இந்தப் பகுதியின் பிரதான தொழில் விவசாயம். இந்நிலையில் இந்தப் பகுதியில் சிலர் அரசு அலுவலர்களின் உதவியோடு கல்குவாரி அமைத்து கனிம வளங்களை சுரண்டிவருகின்றனர். இதனால் பருவமழை பொய்த்து, விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசுநிலங்களாக காட்சியளிக்கின்றன. இதை ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி லாபம் அடைகின்றனர்.
இது குறித்து விவசாயி செல்வராஜ் பேசியதாவது:
"மதகடி காய்ந்தாலும், மலையடி காயாது" என்ற பழமொழி இந்தக் காலத்தில் பொய்த்துப் போய்விட்டது. சேர்வராயன் மலையும், கல்வராயன் மலையும் இணையும் இந்த இடத்தில் இரண்டு கிலோமீட்டர் அகலம் மட்டுமே இடைவெளி உள்ளது. இதில், இரண்டு மலைகளில் இருந்தும் வனவிலங்குகள் அந்த வழியே செல்லும். அந்த வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ஆனால் வன விலங்குகளை அழிக்கும் நோக்கில் சட்டத்திற்கு புறம்பான வகையில் அரசு அனுமதியின்றி கல்குவாரி ஒன்று பல ஆண்டுகளாக, இதேப் பகுதியில் செயல்பட்டுவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கல் குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் சென்ற லாரிகளை மடக்கிப் போராட்டம் நடத்தினோம்.
அந்த இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரின் அனுமதியோடுதான் நடக்கிறது என்று எங்களை சமாதானப்படுத்திவிட்டு எந்தப் பதிலும் கூறாமல் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக அலுவலர்களிடம் புகார் அளித்தோம். அவர்கள் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரின் பின்னணி இருப்பதால் நாங்கள் அறிக்கை அனுப்பிவிட்டோம் என்று மட்டும் பதிலளித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.