சேலம்: சேலம் மாவட்டம் மேற்கு சட்டப்பேரவை தொகுதி முத்துநாயக்கன்பட்டி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்து முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, "சேலம் மாவட்டத்தில் மட்டும் 100 அம்மா கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக லந்துவாடி, கொண்டலாம்பட்டி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் இந்த மூன்று நாட்களில் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரடியாக சென்று தொடங்கிவைப்பார்கள்.
மினி கிளினிக்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அரசாக அதிமுக அரசு இருந்துவருகிறது. சேலத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வரும் வகையில் நான் இருக்கிறேன். முதலமைச்சர் ஆவதற்கு முன்பு எந்த பழனிசாமியாக இருந்தேனோ தற்போது முதலமைச்சரான பிறகும் அதே பழனிசாமியாகத்தான் இருக்கிறேன். மக்கள் நினைக்கும் திட்டங்களை எளிதில் நிறைவேற்றக்கூடிய முதலமைச்சராக இருக்கிறேன்.
7.5 விழுக்காடு ஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் எளிதில் படிக்கும் வகையில், புதிய இடஒதுக்கீடுகள் கூடுதல், மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் கற்கும் வகையில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்திலுள்ள மாணவர் மருத்துவரானால் அந்த கிராமத்திற்காக உதவுவார். அந்த கிராமத்தில் பணியாற்றுவார். விவசாயம் காக்கப்பட்ட ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை
வேளாண்மைத் துறையை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளை பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருத்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்புத் திட்டதை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசின் விருதை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட மத்திய அரசின் விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. தமிழ்நாடு மக்களின் அனைத்து கோரிக்கைகளை நிறேவற்றும் வரை நான் தொடர்ந்து செயல்படுவேன். தமிழ்நாடு மக்கள் அனைவரையும் நான் முதலமைச்சராக பார்க்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மினி கிளினிக் அமைக்கக் கோரி கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்