சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, ஆட்சியர் சி.அ.ராமன், வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், மருத்துவமனை முதன்மையர் முருகேசன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அமைச்சர்கள் இருவரும் இரும்பாலை பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆக்ஸிஜன் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனையிலுள்ள 1081 படுக்கைகளும் ஆக்ஸிஜன் வசதி செய்யப்படவுள்ளது. இதில் 776 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அடுத்து மூன்று, நான்கு தினங்களில் 1081 படுக்கைளும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தி தரப்படவுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் இட நெருக்கடியைத் தவிர்க்க தடுப்பூசி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சளி தடவல் பரிசோதனையும் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. கரோனா தொற்று பாதித்த நிலையில் சேலம் நகர பகுதியில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் மாவட்ட நிர்வாகம், இரும்பாலை நிர்வாகம், ஜேஎஸ்டபிள்யூ ஆகியவை இணைந்து சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. சிகிச்சை மைய பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. மே 25ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் முடிவடைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர், 2 ஆயிரம் தொழில்நுட்பப் பணியாளர்கள் என 10 ஆயிரம் பேர் நியமிக்கப்படவுள்ளனர். சேலத்திற்கும் தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர், தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
தமிழ்நாட்டிற்கு மொத்த ஆக்ஸிஜன் தேவை 470 டன்னாகும். தற்போது 400 டன் ஆக்ஸிஜன் மட்டுமே உள்ளது. இதனால் மீதமுள்ள 70 டன்னை வெளியிலிருந்து பெற்று தேவையைப் பூர்த்தி செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் பழுது ஏற்பட்டு, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னை அடுத்த 5 நாள்களில் சரி செய்யப்பட்ட பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னை வராது" என்றார்.
இதனைத் தொடரந்து, சேலம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வழங்கப்படும் உணவு, மருந்துகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், தற்போது 100 படுக்கைகளுடன் இயங்கி வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 12 ஆண்டுகள் சேமிப்பு - கரோனா நிவாரண நிதியாக வழங்கல்!