சேலம்: கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, மாவட்ட மாநகர காவல்துறை துணை ஆணையாளர் கௌதம் கோயல், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறும்போது, "சேலம் மாவட்டம் முழுவதும் 45 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் 7 காவல் நிலையங்கள் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் உள்ளது. விழுப்புரத்தில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் கள்ள சாராயம் தயாரித்து விற்பனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப் பகுதிகளான கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சமலை, கொளத்தூர் பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளது. கல்வராயன் மலைத் தொடர் பகுதியில் உள்ள பிற மாவட்டங்களில் எல்லைப் பகுதி உள்ளதால் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சோதனைக் குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம்.
மேலும் சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல் துறைக்கு தனித்தனியாக கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பாக 94981 62784, மாவட்ட காவல்துறை சார்பாக 94899 17188 என்ற எண்ணிற்கு எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
கள்ள சாராயம் எந்த இடத்தில் காய்ச்சினாலும், பதுக்கி வைத்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி முதல் இதுவரை 256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் கள்ளச்சாரயம் குறித்து தகவல் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் முறைப்படுத்தப்பட்ட நேரத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் வாங்கி அளவாக குடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் தவறான வழியில் சென்று தனக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்துவது 100% தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கள்ளச்சாரயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த கேள்விக்கு, சாராயத்திற்கு அடிமையானால் அதில் இருந்து மீண்டு வர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்று தகுதியான வசதிகளும் தகுதி வாய்ந்த மருத்துவர்களிடமும் கவுன்சிலிங் பெறலாம். சிறிய பொழுதுபோக்கிற்காக இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச் சாராய விற்பனையை தடுத்து விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்காக உள்ளது.
போதைப் பொருட்களுக்கு பள்ளிக் கல்லூரி மாணவர்கள் அடிமையாவதால் பள்ளி கல்லூரி முதல்வர்கள் மூலமாக ரகசியமாக தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை விற்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்... மெத்தனத்தில் போலீசார்!