ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தன டிப்போ மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுவந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தங்கராஜ் ஆனந்த், பிரகாஷ் ஆகிய மூவர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர், சுமார் 15 கோடி வரை முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரத்தில் அரசு ஊழியர்களும் சிக்க இருப்பதாக, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கணக்கில் வராத பணத்தை முதலீடு செய்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்திருந்தும், காவல்துறையினர் தங்களை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக 28ஆம் தேதி ஒருவர் கூட புகார் தெரிவிக்கவில்லை.
இதனால், தீவிர விசாரணை மேற்கொள்ள சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் முதற்கட்டமாக பதிவு செய்த இந்த வழக்கை, ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.