சேலம் கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'எனது நகரம், எனது பெருமை' குறித்த கணக்கெடுப்பில் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினரைப் பங்கு கொள்ள வைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசிய சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், மாணவிகள் அனைவரும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை 'எனது நகரம், எனது பெருமை' என்ற கருத்துக் கணக்கெடுப்பில் பங்கு கொள்ள வைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் சீர்மிகு நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக கடந்த 1ஆம் தேதி முதல் 'எனது நகரம், எனது பெருமை' என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இக்கருத்துக் கணக்கெடுப்பில் சேலம் சீர்மிகு நகரமும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது கருத்துகளை இணையத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் வரை செல்போன் செயலி மூலம் தங்களது கருத்துகளை மக்கள் பதிவு செய்யலாம்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாரதிதாசன், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'ஸ்மார்ட் சாலைகள் பணிகள் விரைவில் முடிக்கப்படும்'- சேலம் மாநகராட்சி ஆணையர் உறுதி!