அரசு மருத்துவமனைகளில் 300 பணியிடங்களை குறைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சமீபத்தில் அரசு மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்ததில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 14 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு மருத்துவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன், அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருத்துவ பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பணியிட குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அடுத்தக் கட்டமாக சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சையை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் எவ்வித கலந்தாய்வும் செய்திடாமல் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.