சேலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. அந்தவகையில், இன்று மதியம் பலத்த காற்றுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக சேலத்தில் உள்ள ராமகிருஷ்ணா சாலையில் ராட்சத மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக விழுந்தது. மரம் விழுந்த நேரத்தில் அவ்வழியே ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்துள்ளன. இதனால் அந்த ராட்சத மரம் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த ஒருவரும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் பலத்த காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பலியான ஆட்டோ ஓட்டுநரை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.