சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா, நேற்று (அக்டோபர் 2) தனது 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தந்தையின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கிவிழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரது மறைவு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இவரது உடல் பூலாவரி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிவிமானம் மூலமாக சேலம் வருகைதந்து, மறைந்த ராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் மறைந்த ராஜாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர்ப்பொதுமக்கள் என ஏராளமானோர், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு, அவரது சொந்த நிலத்திலேயே இன்று (அக்டோபர் 3) அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தின் அருகே வீரபாண்டி ராஜாவின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!