சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கடைகளை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கடை ஒன்றில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்த பரத்சிங் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மகுடஞ்சாவடி அருகே குடோனில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வடுகப்பட்டி பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு குடோனில் மூட்டை மூட்டையாகவும், அட்டை பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் குடோனில் இருந்த சுமார் 33 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பரத்சிங் அவரது உறவினர்கள் ஓம்சிங், தீபசிங் மற்றும் மதன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ், உதவி ஆணையர் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையாளர் மோகன்ராஜ் கூறியதாவது, "இவர்கள் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர். அவை எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: முட்டைக்கோஸ் மூட்டையில் கஞ்சா, குட்கா கடத்தல் - இருவர் கைது