மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற, வலியுறுத்தி சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராஜகணபதி கோயில் அருகே கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்கள், சிறுபான்மையினர், வியாபாரிகள் என பெரும் திரளானோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு, 'நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததை தாங்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும் ரஜினியின் உண்மையான முகம் தமிழ்நாடு மக்களுக்குத் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார்' என்றார்.
இதையும் படிங்க:திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு