சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாம்பட்டியில் உடும்பு வேட்டையாடி சாப்பிட்ட நீர்முள்ளி குட்டையைச் சேர்ந்த மணி, மூர்த்தி, மற்றொரு மணி, வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த இளையராமன், சந்திரபிள்ளைவலசு யுவராஜ் ஆகிய 5 பேரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வாழப்பாடி வனத்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக உடும்பு வேட்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும், வேட்டையாடிய உடும்பை பலருக்கும் பணத்திற்காக விற்பனை செய்தவர்கள் என்பதும் வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டுவிட்ட பின்னர், அச்சம்பவத்தை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் மற்ற நபர்களுக்கும் அதைப் பகிர்ந்து உள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் ஆடியோ, வீடியோ வாழப்பாடி வனத்துறை அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது.
இதனை அடுத்து வாழப்பாடி வனச்சரக அலுவலர்கள் துரைமுருகன், சிவகுமார் ஆகியோர் கொண்ட அந்தக் குழுவினர், உடும்புக் கறி சாப்பிட்ட அவர்களைப் பிடித்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் மூர்த்தி என்பவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வாழப்பாடி வட்டார வனப்பகுதிகளில் உடும்பு, மான், காட்டுப்பன்றி ஆகிய விலங்குகள் அதிகம் இருப்பதால் அவ்வப்பொழுது வேட்டையாடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் காட்டு விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்