சேலம் மாவட்டம், ஜங்சன் அருகே உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையை ஒட்டி மாநகராட்சி வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு அப்துல் கபூர் என்பருக்கு சொந்தமான மளிகை மொத்த வியாபாரக் கடை முன்பு இருந்த மின் கம்பியில் நள்ளிரவு நேரத்தில் தீப்பொறி ஏற்பட்டு விபத்து நேர்ந்துள்ளது.

இதில் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மளிகைப் பொருள்கள் தீப்பற்றின. வணிக வளாகத்திற்கு அருகிலேயே காவல் நிலையம் உள்ள நிலையில், விபத்து குறித்து அறிந்த உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ வேகமாகப் பரவியதில் அருகில் இருந்த டீக்கடை மற்றும் மளிகை கடைகளுக்கும் தீ பரவியது. இதில் டீக்கடையில் இருந்த மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் தீ மளமளவென பரவி பெரும் விபத்தாக மாறியது.
இதையடுத்து, சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மிகவும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் ஐந்து கடைகள் முழுவதுமாக எரிந்ததில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நசமாகியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.