சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் மாரியப்பன் என்பவர் தேங்காய் குடோன் வைத்துள்ளார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து தேங்காய்களை வாங்கிவந்து குடோனில் வைத்திருந்து பின்னர் கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்துவருகிறார்.
இதுதவிர பல்வேறு சந்தைகளுக்கு சென்று தேங்காய்களை வாங்கிவந்து குடோனில் சேகரித்து விற்றுவந்தார். இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தேங்காய் மண்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில், தேங்காய் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த குடோனின் பின்புறம் சுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தத் தீ விபத்து குறித்து அறிந்த பொதுமக்கள் உடனே சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பள்ளி, குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள்.