சேலத்தில் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தறி தொழிலுக்கு தேவையான நூல்கள் உள்ளிட்ட உதிரி பொருட்கள் விற்கும் கடை நடத்திவரும் இவர், விற்பனைக்கு தேவையான பொருட்களை தனது வீட்டின் அருகேயுள்ள குடோனில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடோனை இரவு 9 மணியளவில் பூட்டிவிட்டு விஜயகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே, நேற்று அதிகாலை 4 மணியளவில் விஜயகுமாரின் குடோனிலிருந்து புகை வந்தது. இதைப் பார்த்த அக்கம்பத்தினர் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் களமிறங்கினர்.
இருப்பினும் தீ அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்ததால், மேற்கொண்டு மூன்று தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுந்தராம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், மின்கசிவால் குடோனில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி - பல்வேறு மாவட்டங்களில் போராட்டம்