சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகு மலை வனப்பகுதிகளில் முயல் வேட்டையாடிய இருவரை வனத் துறை அலுவலர்கள் பிடித்து அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், ”நேற்றிரவு காரிப்பட்டி பிரிவு ஜருகுமலை தெற்கு பீட், ஜருகுமலை காப்பு காடு, அடிக்கரை சரக பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இருசக்கர வாகனத்தை காப்புகாட்டில் மறைத்துவைத்து காட்டு முயலை ஏர்கன்னைப் (AIRGUN) பயன்படுத்தி வேட்டையாட முயன்ற இருவரைப் பிடித்தோம்.
அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ரமேஷ் (28) என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் சேர்வராயன் தெற்கு வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு நபர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.