இயக்குநர் இஸ்மாயிலின் இயக்கத்தில் ‘அழகர் சாமியின் குதிரை’ திரைப்படப் புகழ் அப்புக்குட்டி நடிக்கும் படம் ஐ- ஆர் 8.
விவசாயத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டத்திலுள்ள தீர்த்தமலை, வேட கட்டுமடுவு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவரும், அவரது பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த இயக்குநர், அதிர்ச்சியடைந்து தலைமை ஆசிரியரிடம் படப்பிடிப்பினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லையா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தலைமையாசிரியர், நம் வாழ்வாதாரமே விவசாயம்தான். அதற்காகவே படம் எடுக்கும் உங்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல வந்தோம். முடிந்தால் எங்கள் மாணவர்களுக்கு விவசாயம் பற்றி சொல்லிக் கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து இயக்குநர் இஸ்மாயில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தலைமையாசிரியரின் வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.