சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் எட்டு வழிச்சாலை நல்லதொரு திட்டம் எனவும், இந்த திட்டத்தினால் தொழில் வளம் பெருகி ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், ஆனால் ஒருசில காரணங்களால் தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விரைவில் அனைத்து விவசாயிகளையும் சமாதானப்படுத்தி இந்த எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் எனவும், அதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடும் எனத் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "முதலமைச்சர் உயிர் இழப்பை குறைப்பதற்காகவே எட்டு வழிச் சாலை எனப்படும் விரைவு சாலை திட்டத்தை அமல்படுத்துவதாக கூறினார். விரைவுச்சாலையில் தான் அதிக விபத்துக்கள் நடக்கும் என்பது கூட தெரியாமல் முதலமைச்சர் பேசி வருகிறார். நாங்கள் எந்த ஒரு காலக் கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்களது நிலத்தை கொடுக்க மாட்டோம். எங்கள் உயிரே போனாலும் சரி. இந்த எட்டு வழி சாலைக்காக ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம்" என்றார்.